கோலாலம்பூர்:
அலோர் ஸ்டார், தாமான் சுல்தான் அப்துல் ஹலீமில் உள்ள தனது வீட்டில் 52 வயதுடைய வங்கி பெண் அதிகாரி ஒருவர் பலத்த கத்திக் குத்துக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக அவருடைய 28 வயது மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 52 பயதான ஜஹாருல்லைல் பஷீர் (Zaharullail Basir) என அடையாளம் காணப்பட்டார்.
இன்று காலை அவரது மற்றொரு பிள்ளை, தாய் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்.
அவரது நெஞ்சு, உள்ளங்கை, மணிக்கட்டு மற்றும் தலைப்பகுதியில் பலத்த காயங்கள் இருந்தன.
கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைமை உதவி ஆணையர் சையத் பஸ்ரி சையத் அலி கூறுகையில், கொலையின் பின்னணி இன்னும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்தார். இருப்பினும், வீட்டில் இருந்த நகை, பணம் மற்றும் செல்போன் அடங்கிய கைப்பையை காணவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக, பலியான பெண்ணின் மகனான அமிருல் ஷபிக் ஷம்சுல் ஜஹாரி (Amirul Shafiq Shamsul Zahari, வயது 28) என்பவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாகப் போலீசில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் கோத்தா ஸ்டார் போலீஸ் ஹாட்லைன் (04-774 7222) என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுகலாம்.
தற்போது இச்சம்பவம் குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று போலீசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.





















