
ஜார்ஜ்டவுன், பிப்ரவரி 4:
மலேசியாவில் கடந்த ஆண்டு மட்டும் குடியிருப்பு பகுதிகளில் சுமார் 1,40,000 பாம்பு பிடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை (APM) தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சாலை விபத்துகள் மற்றும் மருத்துவ அவசர நிலைகளுக்கு இணையாக, பாம்புகளைப் பிடிப்பதற்கான அழைப்புகளும் அதிக அளவில் வந்திருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சராசரியாக ஒரு மாநிலத்திற்கு ஆண்டுக்கு 10,000 வழக்குகள் பதிவாவதாகக் குறிப்பிட்ட APM துணைத் தலைமை ஆணையர் கசாலி அப்துல் ரஹ்மான், பினாங்கில் மட்டும் கடந்த ஆண்டில் 8,193 வழக்குகள் பதிவாகியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
காடுகள் அழிக்கப்பட்டு அதிவேகமாக மேற்கொள்ளப்படும் நகரமயமாக்கல் மற்றும் தற்போதைய கடும் வெப்பமான காலநிலை ஆகியவையே பாம்புகள் மனித குடியிருப்புகளுக்குள் நுழைய முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. இயற்கையான வாழ்விடங்கள் பாதிக்கப்படுவதால், குளிர்ச்சியான இடத்தையும் உணவையும் தேடிப் பாம்புகள் வீடுகளுக்குள் தஞ்சம் புகுகின்றன.
குறிப்பாக சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் பினாங்கு போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் இந்த அச்சுறுத்தல் மிகத் தீவிரமாக உள்ளது. ஒரு பாம்பைப் பிடிப்பது என்பது ஒரு குடும்பத்தின் பாதுகாப்பையே உறுதி செய்வதற்குச் சமம் என APM வலியுறுத்தியுள்ளது.
இந்த அச்சுறுத்தலைச் சமாளிக்க, APM அதிகாரிகள் முறையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றிச் செயல்படுவதால் விபத்துகள் மிகக் குறைவாகவே உள்ளன. இருப்பினும், அதிகாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்த நவீன உபகரணங்கள் மற்றும் சிறப்புப் பயிற்சிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், காலத்திற்கேற்ப குடிமைத் தற்காப்புப் படையின் செயல்பாடுகளை வலுப்படுத்த ஒரு புதிய ‘வளர்ச்சி வரைபடம்’ (Blueprint) தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் இத்தகைய சவால்களை இன்னும் நேர்த்தியாகக் கையாள முடியும் என ஆணையர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



















