காஜாங் பெட்ரோல் தாக்குதல்: மருத்துவ ஆய்வக அதிகாரி பார்த்திபன் மீது கொலை முயற்சி வழக்கு!

காஜாங், பிப்ரவரி 5:

கடந்த வெள்ளிக்கிழமை பண்டார் டெக்னாலஜி காஜாங்கில் நிகழ்ந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக, 43 வயதான எஸ். பார்த்திபன் என்பவர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

தனது முன்னாள் காதலியின் மரணத்திற்கு வழிவகுக்கும் என்பதை அறிந்தே, அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரிக்க முயன்றதாக, கொலை முயற்சிக்கான சட்டப்பிரிவு 307 இந்த கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் அதே பெண்ணுக்குச் சொந்தமான ‘புரோட்டான் சாகா’ (Proton Saga) காரை பெட்ரோல் ஊற்றித் தீயிட்டுக் கொளுத்தியதற்காக அவர் மீது இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

நீதிபதி கைனூர் அலீஸா இஸ்மாயில் முன்னிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. பழுப்பு நிறச் சட்டை மற்றும் கருப்பு நிறத் துணி அணிந்து நீதிமன்றத்திற்கு வந்த பார்த்திபன், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

“குற்றச்சாட்டுகள் எனக்குப் புரிகிறது அம்மா. ஆனால் நான் குற்றத்தை மறுக்கிறேன் (I plead not guilty),” என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 30-ஆம் தேதி, அந்தப் பெண்ணின் வீட்டு வாசலில் வைத்து பார்த்திபன் பெட்ரோலை ஊற்றித் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அந்தப் பெண்ணின் தலைமுடி மற்றும் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் பிணை (Bail) குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here