கோலாலம்பூர்:
தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 3 சென் உயர்த்தப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று (பிப்ரவரி 12) முதல் பிப்ரவரி 18-ஆம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு, தீபகற்ப மலேசியாவில் டீசலின் சில்லறை விலை லிட்டருக்கு RM2.99 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், சபா, சரவாக் மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகளில் டீசல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு RM2.15 என்ற அளவிலேயே நீடிக்கும்.
பெட்ரோல் விலையைப் பொறுத்தவரை, RON97 மற்றும் RON95 ஆகியவற்றின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன்படி: RON97: லிட்டருக்கு RM3.10 ஆகவும், RON95: லிட்டருக்கு RM2.54 ஆகவும் விற்கப்படும்.
மேலும், BUDI95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய விலையிலான RON95 பெட்ரோல் விலையும் லிட்டருக்கு RM1.99 என்ற அளவில் மாற்றமின்றி தொடரும் என நிதி அமைச்சு நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலைப் போக்கை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.




















