1.1 பில்லியன் ரிங்கிட் அரசு ஒப்பந்தத்தில் முறைகேடா: ஊழல் தடுப்பு ஆணையம் தீவிர விசாரணை

கோலாலம்பூர்:

மலேசிய அரசாங்கத்திற்கும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கும் இடையே கையெழுத்தான சுமார் 1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தமானது மிகவும் அவசரமாகவும், அதே வேளையில் அரசாங்கத்திற்குச் சாதகமற்ற வகையிலும் முடிக்கப்பட்டதாகச் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் புகார் அளித்துள்ளன.

இப்புகார்களின் அடிப்படையில், நாட்டின் நிதி நிலைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

முதற்கட்டத் தகவல்களின்படி, இந்த மிகப்பெரிய திட்டத்திற்கு நிதி அமைச்சு (MOF) மற்றும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு (MITI) ஆகியவற்றின் முறையான ஒப்புதல்கள் பெறப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தத்தை கையாண்ட அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் சிலர், ஓய்வு பெற்றவுடன் அந்த வெளிநாட்டு நிறுவனத்திலேயே உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டிருப்பது ‘நலன் முரண்பாடு’ (Conflict of Interest) குறித்த சந்தேகங்களையும் வலுப்படுத்தியுள்ளது.

இது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி பொருளாதார அமைச்சிலிருந்து முக்கிய ஆவணங்களை எஸ்பிஆர்எம் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்து உறுதிப்படுத்திய எஸ்பிஆர்எம் செயல்பாட்டுத் துணைத் தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் குசைரி யாஹ்யா, விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அமைச்சின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here