கோலாலம்பூர், பிப் 21:
வரும் ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனநாயகச் செயல் கட்சியின் (DAP) சிறப்பு மாநாடானது, கட்சியின் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கான ஓர் உள்செயல்முறை (Internal Process) எனத் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
மடானி அரசாங்கத்தின் பேச்சாளருமான ஃபஹ்மி ஃபட்சில் இது குறித்துக் கூறுகையில், இந்தச் சிறப்பு மாநாடு குறித்து டிஏபி ஏற்கனவே முறையாக அறிவித்துவிட்டதாகக் குறிப்பிட்டார். “இது முழுக்க முழுக்க டிஏபியின் உட்கட்சி நடைமுறை. கட்சியின் முடிவுகள் மற்றும் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவே இந்த மாநாடு முன்னெடுக்கப்படுகிறது,” என அவர் விளக்கமளித்தார்.
அரசாங்கக் கூட்டணிக்குள் உள்ள மற்ற கட்சிகள் டிஏபியின் இந்தச் செயல்முறையைப் புரிந்து கொண்டுள்ளன. கட்சி உறுப்பினர்கள் ஒருமித்த முடிவுகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.




















