கோலாலம்பூர்:
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர், தமக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளை மாற்றக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சூரியசக்தித் திட்ட ஊழல் வழக்கில் ரோஸ்மா மன்சூர் சிக்கியுள்ளார். இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் நூர்டின் ஹசான் மற்றும் முகமது ருசிமா கஸாலி ஆகியோரை விசாரணையிலிருந்து விலக்க வேண்டும் என்பது ரோஸ்மாவின் கோரிக்கையாக இருந்தது. அவர்கள் இருவரும் இதே விவகாரத்துடன் தொடர்புடைய வேறொரு வழக்கில் முன்னிலையாகி இருப்பதால், பாரபட்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவரது வழக்கறிஞர் ஜக்ஜித் சிங் வாதிட்டார்.
இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி நூர்டின், தாமும் நீதிபதி முகமது ருசிமாவும் இந்த வழக்கில் எவ்வித பாரபட்சமும் காட்டப்போவதில்லை என்றும், விசாரணை நேர்மையாக நடக்கும் என்றும் உறுதியளித்தார்.
இன்றைய விசாரணையில் ரோஸ்மா மன்சூர் நேரில் ஆஜராகவில்லை. அவர் கீழே விழுந்ததில் கை மற்றும் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் வர இயலவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
அவர் ஏன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என நீதிபதி அஸிமா ஓமார் கேள்வி எழுப்பியதற்கு, ரோஸ்மா அதற்கு விரும்பவில்லை என வழக்கறிஞர் பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 3-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
ஏற்கெனவே கடந்த 2022 செப்டம்பர் 1-ஆம் தேதி, இதே சூரியசக்தித் திட்ட ஊழல் வழக்கில் ரோஸ்மா மன்சூர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு:10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 970 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது அவர் மேற்கொண்டுள்ள மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருப்பதால், இந்தத் தண்டனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.





















