6 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

( ரெ.மாலினி)

மலாக்கா: பிப் 27-.

பள்ளிக்கு அருகில் உள்ள புதருக்குள் ஒரு நபரால் துரத்தப்பட்டு, பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக 12 வயது மாணவியை காவல் துறை மீட்டனர்.

மலாக்கா – நேற்று இங்குள்ள பள்ளிக்கு அருகில் உள்ள புதர்பகுதியில், உள்ளாடையுடன் மட்டும் விடப்பட்ட நிலையில், பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக 12 வயது மாணவி ஒருவர் கொடூரமான அனுபவத்தை சந்தித்துள்ளார்.

இரவு சுமார் 7 மணியளவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டபோது, அதிர்ச்சியிலும் பயத்திலும் அழுதுகொண்டே புதருக்குள் படுத்திருந்த நிலையில் இருந்துள்ளார்.

பள்ளி முடிந்த பிறகு (மதியம் 1.05 மணிக்கு) நடைபெறும் கூடுதல் வகுப்பில் அந்த மாணவி கலந்துகொள்ளவில்லை என்பதை உணர்ந்த பள்ளி ஆசிரியர்கள், முதலில் அவரை காணவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மாணவியைத் தேடும் பணி தொடங்கியது. பின்னர், பள்ளியின் மூடிய-சுற்று தொலைக்காட்சி (சி.சி.டி.வி) பதிவுகளை ஆய்வு செய்ததில், மதிய உணவு நேரத்தில் மாணவி பள்ளி வளாகத்திலிருந்து வெளியேறியது தெரியவந்தது.

“மேலும் விசாரணையில், தனது தாயாரின் கார் போல ஒரு கார் இருப்பதைப் பார்த்ததால், மதிய நேரத்தில் பள்ளியை விட்டு வெளியேறியதாகவும், ஆனால் அந்த காரை தனக்கு அறிமுகமில்லாத ஒரு ஆண் ஓட்டிச் சென்றதைக் கண்டு அங்கிருந்து நகர்ந்ததாகவும் மாணவி கூறினார்,” என்று அவர் கூறினார்.

அந்த நபர் தன்னைத் துரத்தியதால், அருகிலுள்ள புதர்பகுதிக்கு ஓடிச் சென்று ஒளிந்துகொண்டதாக மாணவி கூறியுள்ளார்.

இருப்பினும், சந்தேக நபர் அந்தக் குழந்தையைக் கண்டுபிடித்து, பள்ளி சீருடையை கழற்றும்படி கட்டளையிட்டார். இதனால் பயந்துபோன மாணவி உள்ளாடையுடன் மட்டுமே இருந்தார்.

“அதன் பிறகு, சந்தேக நபர் தனது கன்னத்தைத் தொட்டுவிட்டு, தனது கைப்பேசியில் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு, அந்த புதர்பகுதியை விட்டு சென்றுவிட்டதாக மாணவி குற்றஞ்சாட்டினார்,” என்று அவர் கூறினார்.

இரவு சுமார் 7 மணியளவில் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த மாணவியின் குடும்ப உறுப்பினர்கள் அவரைக் கண்டுபிடித்து, மேல் பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், மலாக்கா காவல்துறைத் தலைவர் டத்தோ ஜுல்கைரி முக்தார், புதரில் கண்டுபிடிக்கப்பட்ட மாணவி பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

இந்த வழக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14(a) கீழ் விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here