அரசகுல அவமதிப்பு: தாய்லாந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சிறை

பேங்காக்:

தாய்லாந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சொந்திசா ஜன்கிரூவுக்கு, அரசகுல அவமதிப்பு தொடர்பில் ஈராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்குமுன் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் அவர் அவ்வாறு பேசியதாகக் கூறப்பட்டது.

அரசகுல அவமதிப்பு தொடர்பில் சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டை 31 வயது சொந்திசா மறுத்தார். அவருக்குப் பிணை வழங்கப்பட்டிருப்பதாகவும் தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யக்கூடும் என்றும் அவரது வழக்கறிஞர் ராய்ட்டர்சிடம் தெரிவித்தார்.

இருப்பினும் சிறைத்தண்டனை குறித்து நீதிமன்றம் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை.

தாய்லாந்தில் அரசகுல அவமதிப்புக்கு எதிரான கடுமையான சட்டம் நடப்பில் உள்ளது.

அதன்கீழ், அரசகுலத்தினரை விமர்சித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 15 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

சொந்திசா, மூவ் ஃபார்வர்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர். கடந்த தேர்தலில் அந்தக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்தபோதும், தேர்தலுக்குமுன், வெற்றிபெற்றால் அரசகுல அவமதிப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அது உறுதி அளித்ததால் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்குகிறது. தேர்தல் கொள்கை அறிக்கையிலிருந்து அந்த வாக்குறுதியை நீக்கும்படி தாய்லாந்து நீதிமன்றம் அக்கட்சிக்கு உத்தரவிட்டது.

தாய்லாந்தில் 2020ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 272க்கு மேற்பட்டோர் அரசகுல அவமதிப்பு தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அவர்களில் 17 பேர் விசாரணைக்கு முன்பே சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழு ஒன்று கூறுகிறது.

2023ல் மூவ் ஃபார்வர்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ருக்சனோக் ஸ்ரீநோர்க்கிற்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் அரசகுலத்தினரை அவமதித்துச் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், விசாரணைக்குமுன் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பெண் ஆர்வலர் மாண்டது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here