சபாக் பெர்ணாமில் பெரோடுவா அல்சாவில் 9 சட்டவிரோதக் குடியேறிகள் கடத்தல்; உள்ளூர் நபர் கைது!

சபாக் பெர்ணம் | மார்ச் 02, 2026:

சிலாங்கூர், சபாக் பெர்ணாம் அருகே உள்ள பாசிர் பாஞ்சாங் எரிபொருள் நிலையத்தில் இன்று அதிகாலை போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில், 9 இந்தோனேசியச் சட்டவிரோதக் குடியேறிகளும் அவர்களை ஏற்றிச் சென்ற உள்ளூர் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டனர்.

சிலாங்கூர் மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறையின் (D7) இரகசியப் பிரிவினர் இன்று அதிகாலை 6:30 மணியளவில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்:

சபாக் பெர்ணாம் – கிள்ளான் பிரதான சாலையின் 67-வது கிலோமீட்டரில் உள்ள எரிபொருள் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த பெரோடுவா அல்சா (Perodua Alza) ரக காரை போலீசார் சுற்றி வளைத்தனர். அதில் 6 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என 9 இந்தோனேசியர்கள் முறையான ஆவணங்களின்றிப் பயணிப்பது கண்டறியப்பட்டது.

இவர்கள் அங்கீகரிக்கப்படாத கடல் வழிப்பாதை வழியாகப் படகு மூலம் மலேசியாவிற்குள் நுழைந்துள்ளனர். பேராக் மாநிலத்தின் ‘பான்டாய் ரெமிஸ்’ (Pantai Remis) கடற்கரையில் இறங்கிய இவர்களை, கிள்ளான் மெரு (Meru) பகுதிக்கு அழைத்துச் செல்ல இந்த உள்ளூர் ஓட்டுநர் வந்துள்ளார்.

மலேசியாவிற்குள் நுழைய ஒவ்வொருவரும் படகு ஓட்டுநருக்கு தலா RM1,500 முதல் RM1,600 வரை ரொக்கமாக வழங்கியுள்ளனர்.

“பாக் ஹாஜி” (Pak Haji) எனப்படும் இந்தோனேசிய நபர் ஒருவரின் உத்தரவின் பேரில் தான் இவர்களை அழைத்துச் செல்ல வந்ததாக ஓட்டுநர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சபாக் பெர்ணம் மாவட்டத் தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் மீது 2007-ஆம் ஆண்டு மனிதக் கடத்தல் தடுப்பு மற்றும் குடியேறிகள் கடத்தல் தடுப்புச் சட்டம் (ATIPSOM) மற்றும் குடிவரவுச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து இது போன்ற சட்டவிரோத ஊடுருவல்கள் குறித்து தகவல் தெரிந்தால் போலீசாரிடம் தெரிவிக்குமாறு சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here