மலாக்கா சன்னாசிமலையில் மாசி மகம் கோலாகலம் – பக்தி முழக்கத்தில் அருள் தரிசனம்

ரெ. மாலினி

மலாக்கா மார்ச் 04-

மலாக்காவில் பக்தி உற்சாகத்துடன் நடைபெற்ற மாசி மகம் திருவிழா, அருள்மிகு சன்னாசிமலை ஆண்டவர் கோவில் திருத்தலத்தில் ஆன்மிக பரவசத்தை ஏற்படுத்தியது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழா, மலேசியத் தமிழர்களின் ஆன்மிக மரபையும் கலாச்சார அடையாளத்தையும் வெளிப்படுத்தும் சிறப்புமிக்க நிகழ்வாக திகழ்கிறது.

மார்ச் 01& 2 ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற விழாவில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தெய்வ தரிசனம் செய்தனர். மலாக்கா மட்டுமின்றி வெளி நாடுகளிருந்தும் பக்தர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். சித்தர் பரமயோக நிலையில் ஜீவ சமாதியாக திகழும் புனித தலமாக போற்றப்படும் இந்த ஆலயம், நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் பராமரிப்பில் தொன்மையான காலம் முதல் ஆன்மிக சேவையை தொடர்ந்து செய்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ஸ்ரீ பொய்யாத விநாயகர் ஆலயத்திலிருந்து புறப்பட்ட வெள்ளி இரதம், நாதஸ்வர மேள தாள வாத்திய முழக்கத்துடனும் முருகன் பாடல்களுடன், நகரம் முழுவதும் ஊர்வலமாகச் சென்று மாலை 6.30 மணியளவில் செங் சன்னாசிமலையை வந்தடைந்தது. வழியெங்கும் பக்தர்கள் தேங்காய் உடைத்து, மலர், தீபம் ஏந்தியும் பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும் இரதத்தை வரவேற்றனர்.

தமிழ் கடவுள் முருகப்பெருமான் பச்சை மரகதக் கல் பதித்த வைர வேல் ஏந்தி, தங்க மேனியில் அருள்பாலித்த திருக்காட்சி பக்தர்களின் உள்ளங்களை உருகச் செய்தது. “வெற்றி வேல்! வீர வேல்முருகா!” என்ற கோஷங்கள் முழங்க, பக்தி உணர்வு அலைபாய்ந்தது. பலர் கண்கலங்கிப் பிரார்த்தனை செய்தனர்.

இந்த ஆண்டு மயில் காவடிகள் மற்றும் இடும்பன் காவடிகள் கணிசமாக அதிகரித்திருந்தது. பக்தர்கள் பால் குடம் சுமந்து, அலகு குத்தி, , “அரோகரா” முழக்கத்துடன் தங்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர். தொடர்ந்து அபிஷேகங்ககளும் சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை போன்ற வைபவங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பு, முருகப் பெருமான் லிங்க சொரூபமாக அருள்பாலிப்பதிலேயே அமைந்துள்ளது. “முருகன் = சிவம்” என்ற ஆத்ம தத்துவத்தை உணர்த்தும் அரிய தியானத் தலமாக சன்னாசிமலை விளங்குகிறது.

இவ்விழா குறித்து ஆலயக் காரியக்காரர் டத்தோ டாக்டர் T.R. ராமு தெரிவித்ததாவது:
“அமைதி, அருள், முருகனின் ஆசியை தேடும் அனைவருக்கும் இத்திருத்தலம் பரிசுத்த ஆன்மிக மையமாக திகழ்கிறது. சித்தர் பரமயோக நிலையில் ஜீவ சமாதியாக இங்கு இருப்பதால், தரிசனம் செய்பவர்களுக்கு சகல நலன்களும் கிடைக்கும். இவ்வாண்டு பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

நேற்று இரவு 7 மணிக்கு சுப்பிரமணியர் அழகிய வெள்ளி இரத்தில் மலாக்கா நகரை நோக்கிப் புறப்பட்டு, அதிகாலை 7.17 மணிக்கு மீண்டும் ஸ்ரீ பொய்யாத விநாயகர் ஆலயம் வந்தடைந்தார்.

மொத்தத்தில், இந்த மாசி மகம் திருவிழா மலாக்கா தமிழர் சமூகத்தின் ஆன்மிக ஒற்றுமை, பக்தி பாரம்பரியம் மற்றும் தலைமுறைகள் கடந்து தொடரும் சமய நம்பிக்கையின் சிறப்பை மீண்டும் ஒருமுறை உலகறியச் செய்ததாக அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here