புது தில்லி, மார்ச் 4, 2026:
மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வந்த போர் பதற்றங்கள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துபாய் மற்றும் இந்தியா இடையிலான விமானச் சேவைகள், தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
இது அமீரகத்தில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான இந்தியப் பயணிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
மார்ச் 2-ஆம் தேதி மாலை முதல் துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) மற்றும் அல் மக்தூம் விமான நிலையம் (DWC) ஆகியவற்றிலிருந்து ஒரு சில விமானங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டன.
ஏர் இந்தியா (Air India), இண்டிகோ (IndiGo) மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்கள் இன்று (மார்ச் 4) முதல் கூடுதல் விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவிக்கும் பயணிகளை மீட்க இன்று மட்டும் இந்திய நிறுவனங்கள் சுமார் 58 சிறப்பு விமானங்களை இயக்கவுள்ளன.
துபாய் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்கள் பயணிகளுக்குப் பின்வரும் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்:
அதில் உங்கள் விமான நிறுவனம் உங்கள் பயணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் வரை விமான நிலையத்திற்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வான்வழிப் பாதைகள் மாற்றியமைக்கப்படுவதால், விமானப் பயண நேரங்களில் மாற்றங்கள் இருக்கலாம். எனவே, விமான நிலையத்திற்குப் புறப்படும் முன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் செயலி (App) அல்லது இணையதளத்தைச் சரிபார்க்குமாறும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்து, விமானங்கள் ரத்து செய்யப்பட்ட பயணிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




















