கோலாலம்பூர் | மார்ச் 07, 2026 :
மலேசிய அரசியலில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு முக்கியத் திருப்பமாக, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் (Khairy Jamaluddin) மீண்டும் அம்னோ (UMNO) கட்சியில் இணையப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்புமாறு அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி விடுத்திருந்த பகிரங்க அழைப்பை ஏற்று, கைரி இந்த முடிவை எடுத்துள்ளார்.
முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரான கைரி, தனது மீள் வருகை குறித்துக் கூறியதாவது:”நான் எப்போதுமே அம்னோவின் ஒரு அங்கமாக இருக்கவே விரும்பினேன். கட்சியின் இந்த ஆக்கப்பூர்வமான அழைப்பு எனக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.”
கட்சியில் மீண்டும் இணைவதற்கான முறையான விண்ணப்பக் கடிதத்தைத் தற்போது தயார் செய்து வருவதாகவும், விரைவில் அது சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கட்சியின் ஒழுங்குவிதிகளை மீறியதாகக் கூறி கைரி ஜமாலுதீன் அம்னோவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது மீண்டும் தாய் வீட்டிற்கே திரும்பும் அவரது முடிவு, அம்னோவின் பலத்தை அதிகரிக்கக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்த அறிவிப்பு அம்னோ தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கைரியின் வருகை எதிர்வரும் தேர்தல்களில் கட்சியின் செல்வாக்கை உயர்த்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



















