கோலாலம்பூர் | மார்ச் 07, 2026 :
மத்திய கிழக்கில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, கத்தாரில் வசிக்கும் மலேசியர்களைத் தன்னார்வ அடிப்படையில் (Voluntary Repatriation) தாயகம் அழைத்து வர மலேசிய அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கத்தாரில் உள்ள மலேசியர்களுடன் நடத்திய இணைய வழி கூட்டத்தில் (Webinar) கத்தாருக்கான மலேசியத் தூதர் முஹமட் ஃபைசல் ரசாலி கூறினார்.
இதுவரை மொத்தம் 323 மலேசியர்கள் தங்களின் தாயகம் திரும்பும் விருப்பத்தைப் பதிவு செய்துள்ளனர். சனிக்கிழமை (இன்று) இறுதிப் பட்டியல் தயாராகும் வரை மற்றவர்களும் பதிவு செய்யலாம்.
முதல் மீட்பு விமானம் வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை புறப்பட வாய்ப்புள்ளது. இந்த விமானம் சவூதி அரேபியாவின் ரியாத் (Riyadh) வழியாக மலேசியா வந்தடையும். எனினும், இறுதி நேர அட்டவணை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
தோஹாவில் உள்ள மலேசியத் தூதரகம் மற்றும் கத்தார் மலேசியச் சங்கம் (Malaysian Association in Qatar) இணைந்து சமூக ஒருங்கிணைப்பாளர்கள் உதவியுடன் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இது முழுக்க முழுக்கத் தன்னார்வ அடிப்படையிலான ஒரு முயற்சியாகும். இப்போதைக்கு நாடு திரும்ப விரும்பும் மலேசியர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்குப் பிறகு அரசாங்கத்தின் சார்பில் மற்றொரு சிறப்புத் திருப்பி அனுப்பும் நடவடிக்கை (Repatriation exercise) ஏற்பாடு செய்யப்பட வாய்ப்பில்லை என்பதால், நாடு திரும்ப விரும்புவோர் உடனடியாகப் பதிவு செய்யுமாறு தூதர் முஹமட் ஃபைசல் ரசாலி கேட்டுக்கொண்டுள்ளார்.




















