வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம்.. தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்

கடந்த சில நாட்களுக்கு முன்பாக சில நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியதாக தகவல் பரவியது. இந்த நிலையில் தற்போது அது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் விளக்கமளித்துள்ளது.

அந்த அறிக்கையில், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே நீண்டகாலமாக நல்லுறவு நிலவி வருகிறது.

நடிகர்கள் நலனை, உரிமைகளை பாதுகாப்பது போலவே தயாரிப்பாளர்கள் நலனை கருத்தில் கொண்டே தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக இரு சங்கங்கள் இடையே மோதல் என்ற ரீதியில் ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலமாக செய்திகள் பரப்பப்படுகின்றன.

தமிழ் திரைத்துறையின் முக்கிய சங்கங்களான தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்குள் இடையே எந்த மோதலும் இல்லை. நடிகர்களின் கால்ஷீட், புதிய ஒப்பந்தங்கள் குறித்து தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து சில புகார்கள் வந்தன. அதேபோல் நடிகர்கள் தரப்பிலும் சில பிரச்சினைகளை கூறியுள்ளனர்.

இவை வழக்கமாக இரு தரப்பிலும் எழக் கூடிய, பேசினால் தீர்ந்து விடக் கூடிய பிரச்சினைகள்தான். ஆனால் ஒரு தரப்பு வாதங்களை மட்டுமே மையமாக வைத்து செய்திகள் பரவுவது வருத்தம் அளிக்கிறது. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை மிக சுமூகமாக நடைபெற்று வருகிறது.

அனைத்து பிரச்சினைகளும் விரைவில் களையப்படும். இதை விடுத்து இரு சங்கங்களிடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் விதத்தில் வீண் வதந்திகளை பரப்புவோருக்கு எங்கள் கண்டனத்தை பதிவு செய்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here