கோலாலம்பூர் | மார்ச் 11, 2026:
எதிர்வரும் நோன்புப்பெருநாள் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் மார்ச் 18, 2026 அன்று கூடுதல் விடுமுறை வழங்கப்படுவதாகக் கல்வி அமைச்சு (MOE) அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பண்டிகைக் காலத்திற்கான ஏற்பாடுகளை முறையாகவும் நிதானமாகவும் செய்வதற்குப் போதிய கால அவகாசம் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கல்விச் சமூகத்தின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதே இதன் நோக்கம் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
2026-ஆம் ஆண்டிற்கான கல்வி நாட்காட்டியின்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுமுறைகளுடன் இந்த மார்ச் 18 கூடுதல் விடுமுறையும் இணையும்:
குழு A மாநிலங்கள் (கெடா, கிளந்தான், திரெங்கானு): மார்ச் 18 (கூடுதல் விடுமுறை) மற்றும் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட மார்ச் 19 விடுமுறை.
குழு B மாநிலங்கள் (மலாக்கா, ஜோகூர், நெகிரி செம்பிலான், பகாங், பேராக், பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவாக், சிலாங்கூர், கோலாலம்பூர், லபுவான், புத்ராஜெயா): மார்ச் 18 (கூடுதல் விடுமுறை) மற்றும் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட மார்ச் 19, 20 ஆகிய தேதிகள் விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் நோன்புப்பெருநாள் விடுமுறைக்காலப் பயணங்களைத் திட்டமிடும் குடும்பங்களுக்குப் பெரும் வசதி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



















