கோலாலம்பூர், மார்ச் 11:
இஸ்லாமிய மதத்தைச் சிறுமைப்படுத்தும் வகையில் சமூக ஊடகத்தில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்ட ‘Bat Tuo Sai’ எனும் முகநூல் பக்கத்தின் உரிமையாளருக்கு, மிரி அமர்வு நீதிமன்றம் 10 மாதச் சிறைத்தண்டனையும் 50,000 ரிங்கிட் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அமாட் படாவியின் மறைவு குறித்து, ‘அஸ்ட்ரோ அவானி’ (Astro Awani) செய்தி ஊடகத்தின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த செய்திக்குக் கீழே, 48 வயதான ஜான் முலே அனாக் அலாய் (John Mule anak Alai) என்பவர் இஸ்லாமிய மதத்தைப் புண்படுத்தும் வகையிலான கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC), 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233-ன் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு மேற்கண்ட தண்டனை வழங்கப்பட்டது.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மத உணர்வுகளைப் புண்படுத்தும் அல்லது சமூகத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று MCMC மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளது.
























