புத்ராஜெயா:
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 30 நாட்களுக்குள் தெளிவான நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், கல்வி அமைச்சக தலைமையகத்தின் முன் சுமார் 20 பேர் கொண்ட குழு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் அவர்களுக்கான கோரிக்கை கடிதத்தை அமைச்சக அதிகாரியிடம் சமர்ப்பித்தனர்.
பள்ளிகளில் அதிகரித்து வரும் பகடிவதை சம்பவங்களை சமாளிக்க உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை அமைச்சர் எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், மாணவர்கள் தாக்கல் செய்த பகடிவதை புகார்கள் குறித்து சுயாதீன பார்வையாளர்கள் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அந்த அறிக்கைகளின் முடிவுகளை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
பள்ளிகளில் ஆலோசகர்களின் எண்ணிக்கையை அதிகரித்து உளவியல் மற்றும் சமூக ஆதரவு சேவைகளை வலுப்படுத்த வேண்டும். அதோடு, அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் போன்ற கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் குழு தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளது.




















