டிக்‌டாக் நேரலையில் இனவெறி கருத்துகள்: ஜம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்!

பினாங்கு | மார்ச் 12, 2026:

டிக்‌டாக் (TikTok) நேரலையில் மிரட்டல் மற்றும் இனவெறி தூண்டுதல் கருத்துகளை வெளியிட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மத போதகர் ஜம்ரி வினோத்திடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.

டிக்‌டாக் நேரலை ஒளிபரப்பின் போது, ஜம்ரி வினோத் இனவெறி கருத்துகளைப் பேசியதாகவும், பொது அமைதியை சீர் குலைக்கும் வகையில் தூண்டுதல்களை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கடந்த மார்ச் 8-ஆம் தேதி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

பினாங்கு மாநில போலீஸ் தலைவர் அஜீஸி இஸ்மாயில், ஜம்ரி வினோத் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

தேச நிந்தனைச் சட்டம் 1948, பிரிவு 4(1): தேச ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல், குற்றவியல் சட்டம், பிரிவு 504: பொது அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கில் உள்நோக்கத்துடன் அவமதித்தல், தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, பிரிவு 233(1): இணையதள வசதிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த மார்ச் 7-ஆம் தேதி ஜம்ரி வினோத் ஓட்டிச் சென்ற வாகனம் மறிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்தும் போலீஸ் தலைவர் விளக்கமளித்தார். அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here