மலேசியாவில் ஜனவரி 1 முதல் மார்ச் 9 வரை 9,500 வெளிநாட்டவர்கள் கைது!

கோலாலம்பூர் | மார்ச் 12, 2026 :

மலேசியக் குடிநுழைவுத் துறை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து (ஜனவரி 1 முதல் மார்ச் 9 வரை) நடத்திய 2,618 அமலாக்க நடவடிக்கைகளில், பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 9,497 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 1,158 பேர், 1963-ஆம் ஆண்டு குடிநுழைவு விதிமுறைகளின் 39(b) பிரிவின் கீழ், தங்களின் தற்காலிக வேலை அனுமதி (PLKS) அல்லது சமூக வருகை பாஸ் (PLS) விதிகளை மீறியதற்காகப் பிடிபட்டனர் என்று குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷாபான் தெரிவித்தார்.

குறிப்பாக, சுற்றுலாப் பயணிகளாக (PLS) நாட்டிற்குள் நுழைந்துவிட்டு, உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சட்டவிரோதமாக வேலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடிநுழைவு விதிமுறைகளை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டவர்களில் முதல் இடத்தில் வங்காளதேசம்: 532 பேர், தாய்லாந்து: 248 பேர், இந்தோனேசியா: 111 பேர், சீனா: 86 பேர், பாகிஸ்தான்: 51 பேரும் அடங்குவர்.

1,158 பேரில் 482 பேர் சமூக வருகைப் பாஸைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். இதில் அதிகபட்சமாகத் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் (235 பேர்) ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலர் முறையான அனுமதியின்றி வணிக வளாகங்களை நிர்வகித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாட்டின் குடிநுழைவு வசதிகளைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டவர்கள் மீது எந்தவித சமரசமும் இன்றித் தொடர்ந்து தீவிர அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டத்தோ ஜக்காரியா ஷாபான் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here