கோலாலம்பூர்:
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதை அடுத்து, மலேசியாவின் மாதாந்திர எரிபொருள் மானியச் செலவு சுமார் RM3.2 பில்லியனாக அதிகரித்துள்ளது.
மார்ச் 13, 2026 அன்று நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, இரண்டாம் நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் வெளியிட்ட முக்கிய தகவல்களின் படி, மானியச் செலவு அதிகரித்துள்ளது.
அதாவது Budi95 திட்டத்தின்கீழ் RON95 பெட்ரோலுக்கான மானியம் முன்பு மாதத்திற்கு RM700 மில்லியனாக இருந்தது, தற்போது அது RM2 பில்லியனாக உயர்ந்துள்ளது. அதேநேரம் டீசலுக்கான மானியம் தற்போது மாதத்திற்கு RM1.2 பில்லியன் ஆக உள்ளது.
உலக சந்தையில் பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 80 டாலரிலிருந்து 90 டாலராக உயர்ந்த போதிலும், மலேசிய அரசு RON95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு RM1.99 என்ற அளவிலேயே நிலைநிறுத்தியுள்ளது.
விலை உயர்வால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டாலும், மக்களின் நலனைக் கருதி விலையை உயர்த்தாமல் நிலைநிறுத்துவதற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நிதிச் சீர்திருத்தங்கள் மூலம் கிடைத்துள்ள நிதியைக் கொண்டு இந்த கூடுதல் செலவை அரசு ஏற்றுக்கொள்கிறது என்று அமைச்சர் விளக்கினார்.
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா காமேனி, உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த உலகளாவிய சூழலால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படாவிட்டாலும், பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு கிளந்தான், திரெங்கானு, கெடா மற்றும் ஜோகூர் போன்ற மாநிலங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் கூடுதல் எரிபொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மே மாதம் வரை எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஏற்கனவே உறுதி அளித்துள்ளார்.



















