கோலாலம்பூர்:
வெள்ளிக்கிழமை (மார்ச் 13) காலை, லங்காவி கம்போங் பாடாங் காவோங்கில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட கோரத் தீ விபத்தில், வளர்ப்புப் பூனைகளைக் காப்பாற்ற முயன்ற உரிமையாளர் படுகாயமடைந்தார். இந்த விபத்தில் 27 பூனைகள் தீயில் கருகி உயிரிழந்தன.
புறநகர்ப் பகுதியில் உள்ள அந்த வீட்டில் திடீரெனத் தீப்பிடித்தது.
வீட்டில் கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த 30 பூனைகளில், 27 பூனைகள் தீயின் தாக்கத்தால் பரிதாபமாக உயிரிழந்தன.
தீயணைப்பு வீரர்களின் போராட்டத்திற்குப் பிறகு, 3 பூனைகள் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டன.
தனது செல்லப் பிராணிகளைக் காப்பாற்ற முயன்ற அந்த ஆடவருக்கு முகம் மற்றும் மார்புப் பகுதியில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர் உடனடியாக லங்காவியில் உள்ள சுல்தானா மாலிஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், வீட்டின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. இந்தத் தீ விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் குறித்து அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





















