புத்ராஜெயா MRT கேபிள் திருட்டு: 4 பேர் கைது; 3 நாள் ரயில் சேவை பாதிப்புக்கு முற்றுப்புள்ளி!

ஷா ஆலம் | மார்ச் 15, 2026 :

புத்ராஜெயா MRT வழித்தடத்தில் கேபிள்களைத் திருடி, ரயில் சேவையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நான்கு சந்தேக நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரசரானாவின் துணைப் போலீஸ் படை மற்றும் சிலாங்கூர் மாநிலப் போலீசார் இணைந்து நடத்திய ரகசியக் கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று, பிரசரானா மலேசியா பெர்ஹாட் (Prasarana) தெரிவித்திட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நால்வரும் 30 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, திருடப்பட்ட பொருட்கள் மற்றும் அடையாளங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த மார்ச் 3-ஆம் தேதி ஸ்ரீ டமன்சாரா பாராட் (Sri Damansara Barat) நிலையத்திற்கு அருகே நடந்த கேபிள் திருட்டு தொடர்பாகப் பிரசரானா புகார் அளித்திருந்தது.

இந்தத் திருட்டுச் சம்பவத்தால் புத்ராஜெயா வழித்தட ரயில் சேவைகள் மூன்று நாட்களுக்குத் தடைபட்டன. இதனால் எம்ஆர்டி சேவையைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர் என்று, பிரசரானா தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அமீர் ஹம்தான் கூறினார்.

“இந்தத் திருட்டுச் செயலைக் கட்டுப்படுத்த போலீசாருடனான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும். கண்காணிப்பு மற்றும் தகவல் பகிர்வு தீவிரமாக்கப்படும்.” “விரைவாகவும் தொழில்முறை ரீதியாகவும் செயல்பட்ட சிலாங்கூர் போலீசாருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”

“எம்ஆர்டி வழித்தடங்களில் பாதுகாப்பு ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்படும். பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கண்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here