குவந்தான், மார்ச் 17, 2026 :
பகாங் மாநில சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, இன்று குவந்தான் மாநகராட்சி மைதானத்தில் (Field 1) பொதுமக்களுடன் இணைந்து திறந்தவெளியில் இப்தார் (நோன்புத் துறப்பு) விருந்தில் பங்கேற்றார்.
மன்னராட்சிக்கும் மக்களுக்கும் இடையிலான நெருங்கிய பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக, சுல்தான் அப்துல்லா மற்றும் பகாங் துங்கு அம்புவான் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் புல்வெளியில் விரிக்கப்பட்ட பாய்களில் பொதுமக்களோடு அமர்ந்து நோன்புத் துறப்பு உணவைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பகாங் சுல்தானுடன், பகாங் இளவரசர் (Regent of Pahang) தெங்கு மஹ்கோத்தா தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷா மற்றும் பகாங் அரச குடும்பத்தின் பிற உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மைதானத்திற்கு அருகிலுள்ள மஹ்கோத்தா சதுக்க ரமலான் சந்தைக்குச் சென்ற சுல்தான், அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடன் உரையாடினார். மேலும், நோன்புத் துறப்பிற்கான உணவுகளையும் அங்கேயே வாங்கினார்.
ரமலான் மாதத்தில் மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும், புனித மாதத்தின் உணர்வைப் பகிர்ந்து கொள்ளவும் சுல்தான் கடைபிடித்து வரும் ஒரு உன்னதமான பாரம்பரியமாக இந்த நிகழ்வு மாறியுள்ளது.
இந்த நிகழ்வு அங்கிருந்த மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், அரச குடும்பத்தின் மீதான மரியாதையையும் மேலும் அதிகரித்துள்ளது.




















