மதுரையையும் என்னையும் பிரிக்க முடியாது.. திமுகவையும் பிரிக்க முடியாது.. போட்டு தாக்கிய கமல்ஹாசன்

மதுரை: மதுரையையும் திமுகவையும் பிரிக்க முடியாது, மதுரையையும் கமலையும் பிரிக்க முடியாது என மநீம தலைவர் கமல்ஹாசன், மதுரையில் பிரச்சாரத்தின்போது பேசியுள்ளார். மதுரை லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என தீர்மானித்தேன் என்றால் இங்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் கூட அனுமதி பெற வேண்டியுள்ளது. அரசியல் ஒரு பலம். அரசியலுக்கு வந்தால்தான் நல்லது செய்ய முடியும் என்று புரிந்து கொண்டு அரசியலுக்கு வந்தேன்.

உங்கள் வேட்பாளர் சு.வெங்கடேசனும் அரசியலுக்கு வந்த காரணமும் அதுதான். நான் வித்தியமாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று மார்தட்டிக்கொள்வேன். செய்யப் போவதைப் பற்றித்தான் பேச வேண்டும். செய்யத் தவறியவர்களை பற்றி பேசுவது நேர விரயம். நவீன அரசியல் திட்டிக்கொள்ளும் அரசியலாக இருக்கக் கூடாது, திருத்திக்கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். கொரோனா காலத்தில் எம்.பி நிதி ரூ.5 கோடி நிதி கிடைக்காமலேயே பல நற்பணிகளை செய்திருக்கிறார் சு.வெங்கடேசன். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்கள் கடமை. இந்த வட்டாரத்துக்கு நீங்கள் செய்யும் நல்லது. காவல் கோட்டம் போன்ற நாவல்களை எழுதியிருக்கிறார் என்பதை விட விவசாயிகளின் ஊருக்கு ரயில்பாதை அமைத்துக் கொடுத்துள்ளார். இவரைப் போல் இந்தியாவில் மக்களுக்கு நல்லது செய்த எம்.பிக்கள் யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சு.வெங்கடேசன் 300 கோடிக்கு மேல் கல்விக் கடன் பெற்றுக் கொடுத்திருக்கிறார். 5 ஆண்டுகளில் பல பேருக்கு கல்வி வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறார். இவருக்கு கீழடி நாயகன் என்ற பட்டம் இருக்கிறது. சிறந்த நாடாளுமன்றவாதி. பிரதமர் மருத்துவ நிவாரண நிதியை முழுமையாக சென்றடையச் செய்தவில் இவருக்கு நாட்டிலேயே முதலிடம்.

மதுரையும் நானும் என்று நான் சொல்வது பரமக்குடி காரன் என்பதால் அல்ல. மதுரை எனக்கு காட்டிய அன்பு நீண்டுகொண்டே இருக்கிறது. மதுரையையும் வீரத்தையும், மதுரையையும் பாசத்தையும் பிரிக்க முடியாது. இனி வருங்காலங்களில் மதுரையையும் சு.வெங்கடேசனையும் பிரிக்க முடியாது. மதுரையையும் திமுகவையும் பிரிக்க முடியாது. மதுரையையும் கமலையும் பிரிக்க முடியாது. மதுரையை மாநகரமாக மாற்றிய பெருமை கருணாநிதியைச் சேரும். மதுரையை மாநகராட்சியாக உயர்த்தினார் கருணாநிதி. உயர் நீதிமன்றக் கிளையை மதுரையில் தோற்றுவித்தார். புகழ்மிக்க பாலங்களை அமைத்து நவீன நகரமாக மாற்றியவர் கருணாநிதி. அவரது வழியில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் செய்ததை பட்டியலிடலாம். கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம் இப்படி 70 திட்டங்கள் செய்துள்ளனர். கீழடியின் கலாச்சாரம் மனிதர்களின் கலாச்சாரம். உலகத்தின் கலாச்சாரத்தில் ஒருபகுதி. அதைப்போற்றி பாதுகாக்க வேண்டியது நமது கடமை. தமிழகத்தை விளையாட்டு தலைநகரமாக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பாடுபடுகிறார். அது நிச்சயம் நிறைவேறும். நல்லவர்கள் கையில் ஆட்சி கிடைத்தால் மக்களுக்கு நல்லது நடக்கும்.

குஜராத்தில், ஆந்திராவில், பீகாரில் எய்ம்ஸ் உருவாக்க முடிந்த உங்களுக்கு ஏன் தமிழகத்தில் உருவாக்க முடியவில்லை? தமிழகத்துக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை. அண்ணா சொன்னதுபோல் தெற்கு தேய்ந்து கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க இந்த தேர்தலில் கேடயமாக சு.வெங்கடேசன் இருக்கிறார். நல்லதை தொடரவேண்டும் என்றால் இவருக்கு வாய்ப்பு கொடுத்தே ஆகவேண்டும். என வாக்கு சேகரித்தார் கமல்ஹாசன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here