கோலா திரெங்கானு | மார்ச் 27, 2026
கோலா திரெங்கானுவைச் சேர்ந்த 63 வயது பெண்மணி ஒருவர், அதிக இலாபம் தருவதாகக் கூறி நடத்தப்பட்ட ஆன்லைன் முதலீட்டு மோசடியில் சிக்கி, தனது வாழ்நாள் சேமிப்பான 96,000 ரிங்கிட்டை இழந்துள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் லபுவானை (Labuan) தளமாகக் கொண்ட ஒரு முதலீட்டு விளம்பரத்தைக் கண்டு அந்தப் பெண் ஈர்க்கப்பட்டுள்ளார் என்றும், கடந்த நான்கு ஆண்டுகளாக, 15 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 50 பரிவர்த்தனைகள் மூலம் தனது ஓய்வூதிய நிதியையும் சேமிப்பையும் அவர் முதலீடு செய்துள்ளார் என்றும், கோலா திரெங்கானு மாவட்டப் போலீஸ் தலைவர் அஸ்லி முகமது நூர் கூறினார்.
2022 முதல் இந்த ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி வரை தொடர்ந்து பணத்தைச் செலுத்திய போதிலும், அவருக்கு ஒரு ரிங்கிட் கூட லாபமாகத் திரும்பக் கிடைக்கவில்லை.
நீண்ட காலம் காத்திருந்தும் பலன் இல்லாததால், தான் வஞ்சிக்கப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண்மணி நேற்று மாலை 6:30 மணியளவில் போலீஸில் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்துத் தண்டனைச் சட்டம் பிரிவு 420-இன் கீழ் (ஏமாற்றுதல்) வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குறைந்த காலத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி சமூக வலைதளங்களில் உலாவும் உறுதிப்படுத்தப்படாத முதலீட்டுத் திட்டங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனப் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஏதேனும் முதலீடுகளை மேற்கொள்ளும் முன், அவை முறையான அரசு அங்கீகாரம் பெற்றவையா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
























