ஓடும் காரில் பட்டாசு வெடித்து அட்டகாசம்: ஷா ஆலமில் இளம்பெண் உட்பட நால்வர் கைது!

கோலாலம்பூர் | 29 மார்ச் 2026:

ஓடும் காரின் மேற்கூரை வழியாக (Sunroof) ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடித்துச் சிதறவிட்ட விவகாரத்தில், இளம்பெண் ஒருவர் உட்பட நான்கு பேரை மலேசியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் 50 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில், இரவு நேரத்தில் அதிவேகமாகச் செல்லும் காரின் மேற்கூரை வழியாக நபர் ஒருவர் ஆபத்தான முறையில் வானவேடிக்கை பட்டாசுகளை வெடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்தச் சம்பவம் ஷா ஆலம், எல்மினா ரெயின்ஃபாரஸ்ட் (Elmina Rainforest) அருகே நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது.

சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் சுங்கை பூலோ மற்றும் ஷா ஆலம் செக்ஷன் 9 பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் நால்வர் கைது செய்யப்பட்டதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரம்சே எம்போல் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 28 வயதிற்குட்பட்ட மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் (அனைவரும் உள்ளூர்வாசிகள்) ஆகியோர் அடங்குவர்.

இச்சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட புரோட்டான் சாத்ரியா (Proton Satria) ரக கார், ஒரு கைபேசி மற்றும் எஞ்சியிருந்த பட்டாசுகள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் மீது மூன்று வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது:
1. தண்டனைச் சட்டம் (பிரிவு 286): வெடிபொருட்களை அஜாக்கிரதையாகக் கையாளுதல்.
2. வெடிபொருள் சட்டம் 1957 (பிரிவு 8): உரிமமின்றி வெடிபொருட்களை வைத்திருத்தல். (இதன் கீழ் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது).
3. தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 (பிரிவு 233): இணைய வசதியைத் தவறாகப் பயன்படுத்தியது.

கைது செய்யப்பட்ட நால்வரும் வரும் செவ்வாய்க்கிழமை வரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் (Remand) வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று ஏசிபி ரம்சே எம்போல் உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here