சுபாங் ஜெயா வணிக வளாகத்தில் பெண்களை ‘அப்ஸ்கர்ட்’ (Upskirt) படம் பிடித்த நபர்! போலீசார் தீவிர விசாரணை

கோலாலம்பூர் | மார்ச் 31, 2026

சுபாங் ஜெயாவிலுள்ள ஒரு பிரபல சில்லறை விற்பனை கடையில், பெண்களின் அனுமதியின்றி அவர்களை ஆபாசமாக (Upskirt) புகைப்படம் எடுத்த நபர் குறித்து மலேசியப் போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

வணிக வளாகத்திலுள்ள ஒரு கடையில், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் பெண்களைத் தொடர்ச்சியாக ரகசியமாகப் புகைப்படம் எடுக்கும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அந்த நபருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்று, சுபாங் ஜெயா மாவட்டப் போலீஸ் தலைவர் ஏ.சி.பி வான் அஸ்லான் வான் மாமத் (ACP Wan Azlan Wan Mamat) கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீஸாரிடம் முறையான புகார் அளிக்கப்பட்டுள்ளது. வைரலாகி வரும் வீடியோவை ஆதாரமாகக் கொண்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அந்தச் செயலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஆகியோரை அடையாளம் காணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இது போன்ற அநாகரிகமான மற்றும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

வணிக வளாகங்கள் மற்றும் பொது இடங்களுக்குச் செல்லும் பெண்கள் இது போன்ற சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் உடனடியாகப் பாதுகாப்புப் பணியாளர்களிடமோ அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்திலோ புகாரளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here