பாசார் சினி சம்பவம்: மாணவனை அறைந்தவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம்!

கோலாலம்பூர் | மார்ச் 30, 2026:

பாசார் சினி (Pasar Seni) எல்ஆர்டி நிலையத்திலுள்ள உணவகம் ஒன்றில் முதலாம் படி (Form 1) மாணவனை அறைந்த 48 வயது நபருக்குக் கோலாலம்பூர் நீதிமன்றம் இன்று 2,000 ரிங்கிட் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது.

கடந்த மார்ச் 24-ஆம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட மாணவன் அந்த உணவகத்தில் ரொட்டி வாங்குவதற்காகச் சென்றபோது, வரிசை ஏதும் இல்லாததைக் கண்டு நேரடியாகக் கவுண்டருக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அந்த மாணவனின் முகத்தில் பலமாக அறைந்துள்ளார். இச்சம்பவம் குறித்துப் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 27-ஆம் தேதி ஜாலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் வைத்து அந்தச் சந்தேக நபர் போலீஸாசாரால் கைது செய்யப்பட்டார்.

கைதான நபர் மீது தண்டனைச் சட்டம் பிரிவு 323-இன் கீழ் (தன்னிச்சையாகக் காயம் ஏற்படுத்துதல்) வழக்குப் பதியப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று, டாங் வாங்கி (Dang Wangi) மாவட்டப் போலீஸ் தலைவர் ஏ.சி.பி சசாலி ஆடம் (ACP Sazalee Adam) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த நபருக்கு 2,000 ரிங்கிட் அபராதம் விதித்தார். ஒருவேளை அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றம் விதித்த 2,000 ரிங்கிட் அபராதத் தொகையை அந்த நபரால் செலுத்த முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாகக் காஜாங் சிறையில் (Kajang Prison) அடைக்கப்பட்டதாக ஏ.சி.பி சசாலி ஆடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

பொது இடங்களில் சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கு எதிரான இத்தகைய அத்துமீறல்கள் குறித்துப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here