கோலாலம்பூர்:
பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளமான கெந்திங் ஹைலேண்ட்ஸில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இயங்கி வரும் நகைக்கடையில் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருவதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று ‘Threads’ சமூக வலைத்தளத்தில் பயனர் ஒருவர் வெளியிட்ட காணொளியில், கருப்பு நிற ஆடை அணிந்த இரு நபர்கள் பெரிய சாக்குப்பை ஒன்றுடன் வணிக வளாகத்திற்குள் வேகமாக ஓடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து கெந்திங் பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகனங்கள் கீழே இறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விடுதியிலிருந்து வெளியேறி நண்பகல் 12 மணியளவில் மலையிலிருந்து கீழே இறங்க முயன்ற சுற்றுலாப் பயணிகள் பலர், போலிசாரின் தீவிர சோதனைக் சாவடிகள் காரணமாகக் பல மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
கெந்திங் மலையிலிருந்து கீழே இறங்கும் பாதையில் பாதுகாப்புச் சாவடிகளை அமைத்துள்ள காவல்துறையினர், செல்லும் அனைத்து வாகனங்களையும், குறிப்பாக வாகனங்களின் பின்புறச் சேமிப்புக் கிடங்கையும் (Boot/Bonnet) தீவிரமாகச் சோதனையிட்ட பிறகே செல்ல அனுமதிப்பதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
நகைக்கடையில் கொள்ளை சம்பவம் நடந்ததா அல்லது கெந்திங் பகுதி அதிகாரப்பூர்வமாக முடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்துப் போலிஸ் தரப்பிலிருந்தோ அல்லது கெந்திங் நிர்வாகத்திடமிருந்தோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இச்சம்பவம் குறித்த மேலதிகத் தகவல்களைப் பெற ஊடகங்களும் போலிசாரை தொடர்பு கொண்டு வருகின்றன.






















