கூலாய் | ஏப்ரல் 6, 2026
ஜோகூர், கூலாய் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை திடீரென ஏற்பட்ட 15 நிமிடப் பலத்த சூறாவளி மழையினால், பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. இந்தச் சம்பவத்தால் பல குடும்பங்கள் தற்காலிகமாகத் தங்களது வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
தெமெங்கோங் அடுக்குமாடி குடியிருப்பின் (Temenggong Flats) பிளாக் 4-இல் பலத்த காற்றினால் கூரைகள் பிய்த்து எறியப்பட்டன. இதனால் 6 குடும்பங்கள் தற்காலிகத் தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த சுமார் 10 வாகனங்கள் கட்டிட இடிபாடுகள் விழுந்ததில் சேதமடைந்துள்ளன.
அதேநேரம் தாமான் புத்திரி அடுக்குமாடி குடியிருப்புகளில் (Taman Puteri Flats) 8 வீடுகள் சேதமடைந்துள்ளன, அதில் 6 வீடுகளின் கூரைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கும் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
ஜோகூர் மாநில வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி மன்றக் குழுத் தலைவர் டத்தோ முகமட் ஜாப்னி முகமட் ஷுக்கோர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
தாமான் புத்திரி குடியிருப்பில் உள்ள மூன்று பிளாக்குகளின் கூரைகளை மாற்ற 1.59 மில்லியன் ரிங்கிட் நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
பழைய அஸ்பெஸ்டாஸ் (Asbestos) கூரைகளுக்குப் பதிலாக, அதிக உறுதி கொண்ட மெட்டல் டெக் (Metal Deck) கூரைகள் அமைக்கப்படும். இப்பணிகள் ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-க்குள் முடிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மழைநீர் வீட்டிற்குள் புகாமல் இருக்க, சேதமடைந்த கூரைகளில் தற்காலிகமாக பிளாஸ்டிக் விரிப்புகள் (Canvas) பொருத்தப்பட்டுள்ளன.
1998-ஆம் ஆண்டு கட்டப்பட்ட தெமெங்கோங் அடுக்குமாடி குடியிருப்பில் இத்தகைய சூறாவளி விபத்து ஏற்படுவது இதுவே முதல் முறையாகும். அதேவேளையில், 1999-இல் கட்டப்பட்ட தாமான் புத்திரி குடியிருப்பில் இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
கடந்த சனிக்கிழமை கூலாய் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வானிலை மாற்றங்கள் திடீர் வெள்ளம் மற்றும் கட்டிடச் சேதங்களை விளைவிக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




















