செலாயாங் நீதிமன்றத்தில் பரபரப்பு: காப்பக சிறுவர் துஷ்பிரயோக வழக்கில் 3-வது சந்தேக நபர் ஆஜர் – ஆவேசமடைந்த பெற்றோர்கள்!

செலாயாங் | ஏப்ரல் 10, 2026

பத்துமலை, தாமான் செலாயாங், பெர்மாத்தா, ஜாலான் பெர்மாத்தா பீருவில் உள்ள சிறார் இல்லப் பராமரிப்பு இல்லம் ஒன்றில் நடந்த பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கில், மூன்றாவது சந்தேக நபரான சிறுவன் ஒருவன் இன்று காலை செலாயாங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

சந்தேக நபர் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, அங்கு கூடியிருந்த பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆவேசமடைந்தனர்:

பத்துகேவ்ஸ் சிறார் இல்லப் பராமரிப்பாளர் மீது 15 பாலியல் குற்றச்சாட்டுகள்

அங்கிருந்த பல பெற்றோர்கள் தமிழிலேயே அந்த நபரைக் கோபத்துடன் திட்டியும், தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியும் சத்தமிட்டனர்.

மிகவும் மனவேதனை அடைந்த தந்தை ஒருவர், “எனது மகனைச் சித்திரவதை செய்வதற்குப் பதிலாக, என்னிடம் மோதிப் பார்” என்று அந்தச் சந்தேக நபருக்கு ஆவேசமாகச் சவால் விடுத்தார்.

கூட்டத்தில் இருந்த முதியவர் ஒருவர், “வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்டது” (Harapkan pagar, pagar makan padi) என்று இந்தத் துரோகத்தைக் கண்டித்துக் கூறினார்.

சட்டப்படி அந்தச் சந்தேக நபர் ஒரு சிறுவன் என்பதால் அவரது பெயரை வெளியிட அனுமதி இல்லை. அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, ஒரு துண்டால் தனது தலையை மூடிக்கொண்டிருந்தார். அவர் முகத்தை மறைத்து வந்ததைக் கண்ட அங்கிருந்தவர்கள், அந்தத் துண்டை அகற்றுமாறு கத்தினர். மேலும், அவருக்குப் பிணை (Bail) வழங்கக்கூடாது என்றும் முழக்கமிட்டனர்.

இந்தக் காப்பக விவகாரம் மலேசியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏற்கனவே இருவர் மீது இது தொடர்பாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தற்போது ஆஜர்படுத்தப்பட்டுள்ள இந்தச் சிறுவன் மூன்றாவது சந்தேக நபர் ஆவார். இவர் மீது பல்வேறு பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here