கெப்போங் கொள்ளைச் சம்பவம்: துப்பாக்கி முனையில் 4.4 மில்லியன் ரிங்கிட் கொள்ளை – போலீஸ் அதிகாரி உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு!

கோலாலம்பூர்:

கெப்போங் பகுதியில் உள்ள வீடுகளில் துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி, சுமார் 4.4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகளைக் கொள்ளையடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், துணை கண்காணிப்பாளர் (DSP) உள்ளிட்ட 6 பேர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி அதிகாலை 4:00 மணி முதல் காலை 8:10 மணி வரை, தேசா பார்க் சிட்டி (Desa ParkCity) பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

புக்கிட் அமான் வணிகக் குற்றப்புலனாய்வுத் துறையில் (CCID) பணியாற்றி வந்த, தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள துணை கண்காணிப்பாளர் அகமது ருசைனி அகமட் டஹாலன் (41) மற்றும் அவருடன் தொடர்புடைய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கியைக் காட்டி மரண பயத்தை ஏற்படுத்தியது (Firearms Act 1971), கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டது (Penal Code Section 395) ஆகிய கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

நான்கு வெவ்வேறு அமர்வு நீதிமன்றங்களில் நீதிபதிகள் சுஹைலா ஹாரூன், நோரிடா ஆடம், மசுலியானா அப்துல் ரஷீத் மற்றும் சித்தி ஷகிரா மோக்தாருடின் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து, குற்றமற்றவர்கள் என்று வாதிட்டனர். இந்த வழக்கு ஜாமீனில் வர முடியாதது என்பதால், அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. அடுத்தகட்ட விசாரணை மே 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தச் கொள்ளைக் கும்பலை  போலீஸ் அதிகாரி ஒருவரே வழிநடத்தியதாகக் கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோ ஃபாத்தில் மர்சுஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொள்ளையர்கள் எடுத்துச் சென்றவற்றில் மிக முக்கியமானவை: ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce), பெண்ட்லி (Bentley) மற்றும் டொயோட்டா அல்ஃபார்ட் (Toyota Alphard), மற்றும் ஒரு பாதுகாப்புப் பெட்டி (Safe), 24,200 ரிங்கிட் ரொக்கம், 1,200 அமெரிக்க டாலர், நகைகள் மற்றும் இரண்டு தங்கக் கட்டிகள் என்று அவர் கூறினார்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறை அதிகாரியே இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டது, மலேசிய சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here