ஈப்போ:
ஈப்போவில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட இரண்டு போலீஸ்காரர்கள் உட்பட மொத்தம் 87 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி, பண்டார் பாரு மேடான் (Bandar Baru Medan) மற்றும் தாமான் ஈப்போ (Taman Ipoh) ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு கேளிக்கை விடுதிகளில் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (NCID) இந்தச் சோதனையை நடத்தியது.
இந்தச் சோதனையின் போது 19 முதல் 52 வயதுக்குட்பட்ட 87 வாடிக்கையாளர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பல்வேறு வகையான போதைப்பொருட்களைப் பயன்படுத்தியது சோதனையில் உறுதியானது.
பிடிபட்டவர்களில் மூன்று காவலர்களும் இருந்தனர். அவர்களில் ஜொகூர் மாநிலத்தில் பணியாற்றும் 26 மற்றும் 40 வயதுடைய கார்ப்பரல் (Corporal) மற்றும் லான்ஸ் கார்ப்பரல் (Lance Corporal) ஆகிய இருவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
ஒரு காவலர் ‘கெட்டமைன்’ (Ketamine) பயன்படுத்தியதும், மற்றொருவர் ‘மெத்தாம்பேட்டமைன்’ உள்ளிட்ட மூன்று வகை போதைப்பொருட்களைப் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. பேராக் மாநிலத்தில் பணியாற்றும் மூன்றாவது அதிகாரிக்கு நடத்தப்பட்ட சோதனையில் முடிவு ‘நெகட்டிவ்’ என வந்தது.
இது குறித்து புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஹுசைன் உமர் கான் கூறுகையில், “சட்டத்தை மீறும் எவரவாக இருந்தாலும், அவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் காவல்துறை சமரசம் செய்துகொள்ளாது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று எச்சரித்துள்ளார்.
இந்தச் சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட 87 பேர் மீதும் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




















