ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்டுட்கார்ட் பொது மகளிர் டென்னிஸ் போட்டியில், கஸகஸ்தானின் எலனா ரைபகினா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார். போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அவர் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் ௭-௫, ௬-௧ என்ற நேர் செட்களில், ௭ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் கரோலினா முசோவாவை வீழ்த்தினார்.
இந்த ஆட்டம் ௧ மணிநேரம், ௧௮ நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.இருவரும் மோதியது இது ௪ஆவது முறையாக இருக்க, ரைபகினா ௨ஆவது வெற்றியுடன் கணக்கை நேர் செய்திருக்கிறார். சாம்பியனான ரைபகினாவுக்கு வெற்றிக் கோப்பை, ௫௦௦ தரவரிசை புள்ளிகளுடன், ரூ.௧.௭௧ கோடி ரொக்கப் பரிசோடு, புதிய போர்ஸ் சொகுசு கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.
இதுவரை தாம் விளையாடிய போட்டிகளின் இறுதிச்சுற்றில் வெற்றி – தோல்வி கணக்கை ௧௩-௧௨ என்ற நிலைக்குக் கொண்டு வந்துள்ளார் ரைபகினா. சாம்பியனான அவர் உலகத் தரவரிசையில் நம்பர் ௨ வீராங்கனையாக நீடிக்கும் நிலையில், இறுதியில் தோற்ற முசோவா உலகின் ௧௧-ஆம் நிலைக்கு முன்னேறவுள்ளார்.
இரட்டையர்: ஸ்டுட்கார்ட் பொது போட்டியின் இரட்டையர் பிரிவில், போட்டித்தரவரிசையில் ௪ஆம் இடத்திலிருந்த ரஷ்யாவின் லுட்மிலா சாம்சோனோவா/அமெரிக்காவின் நிக்கோல் மார்டினெஸ் இணை ௬-௧, ௬-௧ என்ற நேர் செட்களில் எளிதாக, முதலிடத்தில் இருந்த சீனாவின் ஜாங் ஷுவாய்/லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ கூட்டணியை வீழ்த்தி வாகை சூடியது.
இந்த வெற்றியின் மூலமாக ரைபகினா தனது டென்னிஸ் கேரியரில் ௧௩ஆவது டபிள்யூடிஏ பட்டத்தை வென்றுள்ளார். களிமண் களத்தில் இது அவரின் ௬ஆவது சாம்பியன் பட்டமாகும். ரைபகினா தனது முந்தைய ௧௨ பட்டங்களையுமே வெவ்வேறு போட்டிகளில் வென்றிருந்த நிலையில், முதல்முறையாக இந்த ஸ்டுட்கார்ட் பொது போட்டியில் ௨ முறை சாம்பியன் ஆகியுள்ளார். இதற்கு முன் அவர் இந்தப் போட்டியில் ௨௦௨௪இல் கோப்பை வென்றிருந்தார்.









