கோலாலம்பூர்:
கிளந்தான், கம்போங் புனோஹானில் சட்டவிரோதக் குடியேறிகளைக் கடத்திச் செல்லும் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட 18 வயது இளைஞர் ஒருவரைப் பொது அமைதிப் படை போலீசார் கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர்.
தப்பியோட முயன்ற அவரது வாகனத்தை மடக்கிப் பிடித்தபோது, அதில் மறைந்திருந்த நான்கு இந்தியர்களும் ஒரு இலங்கை நாட்டவர் என மொத்தம் ஐந்து பேர் மீட்கப்பட்டதோடு, ஒரு லட்சத்து 26,000 ரிங்கிட் மதிப்பிலான வாகனம், வெளிநாட்டுப் பணம், கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
தாய்லாந்து எல்லை வழியாக ஒரு நபருக்கு 3,000 ரிங்கிட் வீதம் பெற்றுக்கொண்டு மலேசியாவிற்குள் நுழைய முயன்ற இவர்களை, கோத்தா பாரு பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் செல்ல அந்த இளைஞருக்கு ஒரு நபருக்கு 100 ரிங்கிட் கூலி பேசப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் சோதனையில் சம்பந்தப்பட்ட இளைஞர் போதை பொருள் உட்கொண்டது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரும், ஐந்து சட்டவிரோத குடியேறிகளும் தும்பட் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டு, குடிநுழைவுச் சட்டம், அபாயகரமான போதைப்பொருள் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.





















