மலேசியாவில் ‘வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம்’ வெற்றி: ஒரே வாரத்தில் 3.34 லட்சம் லிட்டர் எரிபொருள் மிச்சம்!

கோலாலம்பூர்:

அரசாங்கம் அண்மையில் அறிமுகப்படுத்திய வீட்டிலிருந்தே பணியாற்றும் (WFH) திட்டத்தின் மூலம் குறுகிய காலத்திலேயே 3,34,000 லிட்டர் எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளரும் அமைச்சருமான ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான அரசாங்கம், கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி அமைச்சகங்கள் மற்றும் அரசு முகமைகளில் இத்திட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் அளித்தது. இது கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.

திட்டம் தொடங்கிய சில நாட்களிலேயே சுமார் 1,55,000 அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற விண்ணப்பித்துள்ளனர். இந்தத் திட்டத்தினால் போக்குவரத்து குறைந்து, இதுவரை 3,34,000 லிட்டர் எரிபொருள் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

சேமிக்கப்பட்ட எரிபொருளின் மதிப்பு சுமார் 6,78,000 ரிங்கிட் என்று அவர் கூறினார்.

இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அரசாங்கக் கூட்டத்தில் அமைச்சரவையின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர், இந்தச் சேமிப்பு குறித்த விரிவான தரவுகளைச் சமர்ப்பித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஃபாஹ்மி ஃபாட்சில்: “தற்போது கிடைத்துள்ள தரவுகள் அரசாங்கத் துறையைச் சேர்ந்தவை மட்டுமே. தனியார் துறையிலும் எத்தனை ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுகிறார்கள் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அந்தத் தரவுகளும் இணைக்கப்பட்டால், ஒட்டுமொத்த எரிபொருள் சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மீதான சாதகமான தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்,” என்று குறிப்பிட்டார்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், ஊழியர்களின் வேலை-வாழ்க்கை சமநிலையை (Work-life balance) மேம்படுத்தவும் கொண்டு வரப்பட்ட இத்திட்டம், பொருளாதார ரீதியாகவும் அரசாங்கத்திற்குப் பெரும் நன்மையைத் தந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here