கோவை:
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் தொழில்நுட்பத்துறை பின்தங்கிவிட்டதாகவும், சென்னை மாநகரம் தனது பொலிவை இழந்துவிட்டதாகவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, தமிழகத்தின் தற்போதைய நிலவரம் குறித்துப் பல்வேறு அதிரடி விமர்சனங்களை முன்வைத்தார்:
தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை (IT) வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், புதிய முதலீடுகள் கிடைக்காததால் பல நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விமான நிலைய விவகாரம்: “ஆந்திராவின் தலைநகர் அமராவதியில் 2,500 ஏக்கரில் பிரம்மாண்ட விமான நிலையம் அமையவுள்ளது. ஆனால், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு வெறும் 500 ஏக்கர் நிலம் ஒதுக்கக்கூட திமுக அரசு தயக்கம் காட்டியது,” என அவர் சாடினார்.
திமுக ஆட்சியில் ஊழல்கள் மலிந்துவிட்டதாகவும், இதனால் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்துப் பகுதிகளும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆந்திராவில் கூகுள் நிறுவனம், தரவு மையங்கள் மற்றும் குவாண்டம் மையங்கள் என சுமார் 15,000 கோடி ரிங்கிட் (சுமார் 2.8 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
திமுகவின் கோரிக்கையின்படி, வரும் 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவத்தில் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று எச்சரித்த அவர், இதற்குத் தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்களா? எனக் கேள்வி எழுப்பினார்.
“திமுக தோற்க வேண்டும், அப்போதுதான் தமிழகம் வெற்றிபெறும்” என்று தனது பேச்சின் நிறைவாக அவர் வலியுறுத்தினார்.



















