மலாக்கா நீரிணையில் கப்பல்களுக்கு வரி விதிக்கும் இந்தோனேசியாவின் பரிந்துரை: அனைத்துலக சட்டங்களுக்கு முரணானது என நிபுணர்கள் எச்சரிக்கை!

கோலாலம்பூர்:

மலாக்கா மற்றும் சிங்கப்பூர் நீரிணைகளைக் கடந்து செல்லும் கப்பல்கள் மீது வரி விதிக்கப்படலாம் என இந்தோனேசிய நிதி அமைச்சர் புர்பாயா யுதி சதேவா அண்மையில் முன்வைத்த பரிந்துரை, அனைத்துலக கடல்சார் சட்டங்கள் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.

மலாக்கா நீரிணை போன்ற அனைத்துலக கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் வெளிநாட்டு கப்பல்கள் தடையின்றி பயணிப்பதை ஐக்கிய நாடுகளின் கடல்சார் சட்ட உடன்படிக்கையான ‘அன்குலோஸ்’ (UNCLOS) உறுதி செய்கிறது.

இவ்விதிகளின்படி, ஒரு நாட்டின் கடல் எல்லை வழியாகப் பயணிக்கும் கப்பல்களுக்கு அத்தியாவசியச் சேவைகளை வழங்கினால் மட்டுமே கட்டணம் வசூலிக்க முடியும் என்றும், வெறுமனே அப் பாதையைப் பயன்படுத்துவதற்காக வரி விதிக்க முடியாது என்றும் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இத்தகைய ஒருதலைப்பட்சமான வரி விதிப்பு முறை, உலகளாவிய வர்த்தக விநியோகச் சங்கிலியைப் பாதிப்பதுடன், ஹோர்முஸ் மற்றும் ஜிப்ரால்டர் போன்ற மற்ற முக்கிய நீரிணைகளிலும் இதே போன்ற ஆபத்தான முன்னுதாரணங்களை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகள் அனைத்துலக சட்டங்களுக்கு உட்பட்டு, இப்பாதையைத் தொடர்ந்து நடுநிலையாகவும் சுதந்திரமாகவும் பேண வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here