சண்டாக்கான் தீ விபத்து: பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் கல்வி நிதியுதவி – ஃபட்லினா சிடெக்

கோலாலம்பூர்:

சபா, சண்டாக்கான், கம்போங் பஹாகியாவில் அண்மையில் நிகழ்ந்த பெரும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மலேசிய மாணவருக்கும் தலா 300 ரிங்கிட் சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிவுறுத்தலின் பேரில், இந்த நிதி ஏற்கனவே அந்தந்தப் பள்ளிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், இது உடனடியாக மாணவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

சுமார் 1,000 வீடுகளைச் சாம்பலாக்கிய இந்த விபத்தினால் உடைமைகளை இழந்த மாணவர்களுக்குச் சீருடை அணிவதிலிருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான போக்குவரத்து, உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்கவும் மாநிலக் கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்குத் தலா 1,500 ரிங்கிட் ரொக்க உதவியைப் பிரதமர் அறிவித்திருந்த நிலையில், கல்வி அமைச்சின் இந்த உடனடி நடவடிக்கை மாணவர்களின் கல்வித் தொடர்ச்சியை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here