(ரெ.மாலினி)
மலாக்கா:
மலாக்கா மாநில ஆளுநர் துன் முகமட் அலி ருஸ்தாம் மாநிலச் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் ஆயத்தப் பணிகள் சுமூகமாக, வெளிப்படையாக மற்றும் தொழில்முறையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலின் தளவாடப் பொருள்கள் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகியவை நேர்மைக் கொள்கையை உயர்வாகப் போற்றி நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் மக்களின் ஜனநாயக முறைமை மீதான நம்பிக்கை பேணப்படும் என அவர் கூறினார்.
“நாம் தற்போது ஐந்தாவது பணிக் காலத்தில் இருக்கிறோம். இது 15-வது மலாக்கா மாநிலச் சட்டமன்றத்தின் இறுதி ஆண்டாகும். அதன்படி, மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்வு நடைமுறையின் வழியாகச் செல்லவிருக்கிறது. இது மதிக்கவும் பேணவும் வேண்டிய ஜனநாயகப் பழக்கத்தின் ஒரு பகுதியாகும்,” என்று இன்று இங்குள்ள ஸ்ரீ நெகேரியில் நடைபெற்ற மலாக்கா மாநிலச் சட்டமன்றத் சபையின் திறப்பு விழாவில் உரையாற்றுகையில் அவர் கூறினார்.
மலாக்கா மாநிலச் சட்டமன்றத்தின் ஐந்தாவது பணிக்காலம் வரும் டிசம்பரில் முடிவடையவுள்ளது. இதனால் இந்த ஆண்டில் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நடத்துவதற்கான வழி திறக்கிறது.
உலகப் புவிசார் அரசியல் நிலவரங்கள், குறிப்பாக மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதல் குறித்துக் கருத்துரைத்த துன் முகமட் அலி, இது பன்னாட்டுப் பாதுகாப்பு அம்சங்களை மட்டும் பாதிப்பதில்லை, மாறாக உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றது என்றார்.
நடைபெறும் பதற்றமான சூழல், ஹோர்முஸ் நீரிணை போன்ற மூலோபாயப் போக்குவரத்துப் பாதைகளின் விநியோகச் சங்கிலியில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உலகளாவிய எரிசக்திக்கு மிக முக்கியமானதாகும், குறிப்பாக வர்த்தகத்தின் முதன்மை நாடியாக இருக்கும் சூழலில். இந்தப் பாதையில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால், எரிசக்தி விநியோகத்தைப் பாதிக்கவும், எண்ணெய் விலையை உயர்த்தவும், பசிபிக் பகுதி நாடுகள் உட்பட உலகப் பொருளாதாரத்திற்குச் சங்கிலித் தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது,” என்றார்.
மலேசியாவும் அதன் விளைவை உணருவதாகக் கூறினார். அதாவது, எரிசக்தி இறக்குமதிச் செலவு அதிகரிப்பது பணவீக்க விகிதத்துக்கு அழுத்தம் கொடுப்பதோடு, போக்குவரத்து, உற்பத்தி, சேவைத் துறைகளில் இயக்கச் செலவுகளையும் உயர்த்துகிறது.
அந்த நிலைமை மறைமுகமாக மக்களின் வாழ்க்கைச் செலவுக்கும் அழுத்தத்தைக் கொடுப்பதோடு, அரசாங்கத்திடமிருந்து பயனுள்ள மீட்பு நடவடிக்கைகளைக் கோருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் செலவு நிலைத்தன்மை மற்றும் விநியோகச் சங்கிலியைச் சார்ந்துள்ள தொழில்துறை, தளவாடங்கள் மற்றும் சுற்றுலாத் துறைகளில் மலாக்காவும் பாதிப்படைந்துள்ளது என்றார்.
எனவே, மாநில அரசாங்கம் பொருளாதாரப் பன்மயமாக்கல், எரிசக்தி திறனை மேம்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கப் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார மீள்திறனைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். இதனால் வெளிக் காரணிகளின் மீதான சார்பு குறையும்.
மலாக்கா மக்கள் எப்போதும் போதுமான, நிலையான மற்றும் மலிவு விலையில் உணவுப் பொருட்களைப் பெறும் வகையில், மாநிலத்தின் உணவுப் பொருட்கள் விநியோகம் பயனுள்ளதாகவும், ஒழுங்காகவும் நிர்வகிக்கப்பட வேண்டும்,” என்றார்.
-end




















