பெட்டாலிங் ஜெயா :
பெட்டாலிங் ஜெயாவில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம், மரங்கள் முறிந்து விழுந்தது மற்றும் நிலச்சரிவு போன்ற பாதிப்புகளைச் சீரமைக்க பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) தனது விரைவுப் பதிலளிப்புப் படை (Rapid Response Squad) மற்றும் தொழில்நுட்பக் குழுக்களை உடனடியாகக் களமிறக்கியுள்ளது.
நேற்று பெய்த மழையினால் மெடான் செலேரா 223 (Medan Selera 223), PJS 2/3, PJS 4/21B, PJS 6, ஜாலான் 17/21H மற்றும் தாமான் புவானா பெர்டானா ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் தேங்கிய வெள்ளநீர் இரவு 8:43 மணிக்குள் முழுமையாக வடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்மா டாஜு (Wisma Daju) அருகிலுள்ள ஜாலான் பாராட், ஜாலான் PJU 8/3A, ஜாலான் டெம்ப்ளர் மற்றும் செக்ஷன் 8-ல் உள்ள உணவகத்தின் பின்புறம் ஆகிய இடங்களில் மரம் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செக்ஷன் 20/14 பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வில், வடிகால் கட்டமைப்பில் ஏற்பட்ட சரிவு காரணமாக இது நிகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு உடனடி சீரமைப்புப் பணிகள் தேவைப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் துப்புரவுப் பணிகள், கண்காணிப்பு மற்றும் அபாயத்தைக் குறைக்கும் பணிகளில் தொழில்நுட்பக் குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக மாநகராட்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 223 உணவகப் பகுதியில் தேங்கியிருந்த குப்பைகளை MBPJ ஒப்பந்ததாரர்கள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போதைய வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு MBPJ பொதுமக்களுக்குப் பின்வரும் ஆலோசனைகளை வழங்கியுள்ளது: பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், வெள்ளம் தேங்கியுள்ள சாலைகளில் வாகனங்களை ஓட்ட வேண்டாம், நீரோட்டம் அதிகமாக இருப்பதால் பெரிய வடிகால்கள் மற்றும் ஆறுகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
நகராண்மைக்கழகம் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், அவ்வப்போது புதிய தகவல்களைப் பகிரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















