“அதிர்ச்சியூட்டும் விபரீத விளையாட்டு”: அடுக்குமாடி குடியிருப்பின் உச்சியிலிருந்து செங்கல்லை வீசிய சிறுவன் – வைரலாகும் சிசிடிவி காட்சி!

கோலாலம்பூர், ஏப்ரல் 11:

கோலாலம்பூரில் உள்ள மக்கள் வீடமைப்புத் திட்ட (PPR) அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல்தளத்திலிருந்து, சிறுவன் ஒருவன் செங்கல்லைக் கீழே வீசும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள 34 விநாடி நீளமுள்ள அந்தக் காணொளியில், அந்தச் சிறுவன் நடைபாதையில் இருந்த செங்கல் ஒன்றை எடுத்து, சுற்றுப்புறத்தை உற்று நோக்குகிறான். பின்னர், எவ்வித அச்சமும் அல்லது பொறுப்புணர்ச்சியும் இன்றி, மிக உயரமான இடத்திலிருந்து அந்தச் செங்கல்லைக் கீழே வீசுகிறான்.

இந்தச் சிறுவனின் பொறுப்பற்றச் செயலால், கீழே நடந்து செல்லும் அப்பாவிகள் உயிரிழக்கும் அபாயம் இருந்திருக்கக்கூடும் என நெட்டிசன்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த காணொளியைப் பார்த்த பலரும், சம்பந்தப்பட்ட சிறுவன் மற்றும் அவனது பெற்றோர் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இச்சம்பவம், கடந்த 2018-ஆம் ஆண்டு ஸ்ரீ பந்தாய் PPR குடியிருப்பில் நடந்த ஒரு சோகமான சம்பவத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது. அன்று, அடுக்குமாடி குடியிருப்பின் 21-ஆவது மாடியிலிருந்து வீசப்பட்ட நாற்காலி ஒன்று, கீழே சென்றுகொண்டிருந்த 15 வயது சிறுவன் மீது விழுந்ததில் அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். அந்தத் துயரமான நிகழ்வின் வடுக்கள் இன்னும் மாறாத நிலையில், மீண்டும் இத்தகைய ஆபத்தான செயல்கள் நடப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

உயரமான கட்டிடங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், பிள்ளைகளின் இத்தகைய ஆபத்தான பழக்கவழக்கங்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கண்காணிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, அடுக்குமாடி குடியிருப்பின் நிர்வாகம் மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here