கோலாலம்பூர்:
மலேசிய மேலவையின் (டேவான் நெகாரா) புதிய உறுப்பினர்களாக ஆறு புதிய முகங்கள் உட்பட மொத்தம் 13 செனட்டர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். மேலவைத் தலைவர் டத்தோ அவாங் பெமி அவாங் அலி பாசா முன்னிலையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.
மன்னரால் நியமிக்கப்பட்ட ஆறு புதிய உறுப்பினர்கள் இன்று முதல் மே 10, 2029 வரையிலான மூன்று ஆண்டு காலத்திற்குப் பணியாற்றுவார்கள். அவர்களில் டத்தோஸ்ரீ முகமது சைனி சல்லே (பெந்தோங் அம்னோ செயல் தலைவர்), டத்தோ வோங் யூ ஃபோங் (மசீச மகளிர் பிரிவுத் தலைவர்), டத்தோ பூங் ஜின் ஜே (சபா டிஏபி தலைவர்), ஷேக் உமர் பகாரிப் அலி (ஜொகூர் டிஏபி துணைத் தலைவர்), லேரி அசப் (சரவாக் டிஏபி உதவிச் செயலாளர்) ,ஆற்றும் ஆர். தியாகராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஏற்கனவே செனட்டர்களாக இருந்த ஏழு பேர் மீண்டும் தங்களின் பதவிக்காலத்தைத் தொடர மறுநியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களது பதவிக்காலம் மார்ச் 20, 2026 முதல் மார்ச் 19, 2029 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
“செனட்டர்கள் அனைவரும் மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்களின் குரலாக ஒலிப்பதோடு, மேலவையை முதிர்ச்சியான மற்றும் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கான தளமாக மாற்ற வேண்டும்” என்று, டத்தோ அவாங் பெமி அவாங் அலி பாசா கூறினார்.




















