ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநிலத் தேர்தல் நாளைக்கு நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநிலத் தேர்தல் குறித்த விவாதங்கள் அரசியல் களத்தில் பரவலாகி வரும் நிலையில், இன்று ஜோகூர் அம்னோ மாநிலத் தொடர்பு அலுவலகத்தில் நடைபெற்ற அம்னோ உச்ச செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெளிவுபடுத்தினார்.
மாநிலத் தேர்தலை நடத்துவது குறித்து மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் ஜோகூர் மாநில இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் ஆகியோரின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக ஜோகூர் தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து, ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபிஸ் காஸியுடன் விரிவான ஆலோசனை நடத்தப்படும்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த அம்னோ கூட்டமானது, பல்வேறு தேசியப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கான ஒரு சாதாரண சந்திப்பே தவிர, பிரத்யேகமாக மாநிலத் தேர்தல் பற்றியது அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
“உண்மையைச் சொல்வதானால், இது ஒரு வழக்கமான சந்திப்பு மட்டுமே. நாடு தழுவிய அளவில் விவாதிக்கப்பட வேண்டிய பல பெரிய தேசியப் பிரச்சினைகள் உள்ளன. எனவே, மாநிலத் தேர்தல் குறித்து இப்போதைக்கு அவசர முடிவுகள் ஏதுமில்லை,” என்று ஜாஹிட் ஹமிடி மேலும் விளக்கமளித்தார்.




















