ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் பரிந்துரைத்து, ஜோகூர் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி நாளை நடைபெறும் அதன் மாநாட்டில் ஒரு மனுவைச் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட ஆறு மாநிலத் தொகுதிகள் இருப்பதாகவும், மற்றொன்று அந்த எண்ணிக்கையை நெருங்கி வருவதாகவும் ஜோகூர் பக்கத்தான் ஹரப்பான் துணைத் தலைவர் சுல்கிஃப்ளி அஹ்மத் கூறினார்.
தொகுதி எல்லைகளின் கடைசி மறுஆய்வு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதால், “இதைச் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது, மேலும் சட்டமன்ற உறுப்பினர்களை நியமிப்பதை விட இது ஒரு சிறந்த நடவடிக்கை என்று நாங்கள் கருதுகிறோம்” என்று அவர் கூறியதாக ‘தி ஸ்டார்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில், ஜோகூர் மாநில சட்டமன்றம், ஐந்து நியமன உறுப்பினர்களை நியமிக்க அனுமதிக்கும் வகையில் மாநில அரசியலமைப்பைத் திருத்தியது. இதன்மூலம், மொத்தப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது.
ஜோகூர் பக்கத்தான் ஹரப்பான் இந்த முன்மொழிவை எதிர்த்ததுடன், நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மே 13 அன்று கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்கியது. மேலும், மாநில சட்டமன்ற இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகத் தொகுதி மறுவரையறைப் பணியையும் முன்மொழிந்தது.
வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் அனைத்து 56 இடங்களிலும் போட்டியிடப் போவதாக ஜோகூர் பிஎன் அறிவித்திருப்பது குறித்தும் கருத்துத் தெரிவித்தார். தேர்தலுக்குத் தயாராவதில் பக்கத்தான் ஹரப்பான் தனது திசையைத் தீர்மானிக்க இது உதவியதாக அவர் கூறினார்.
தேர்தலில் இரு கூட்டணிகளும் இணைந்து செயல்படுமா இல்லையா என்பது குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த “மிகத் தெளிவான செய்தி” என்று அந்த அறிவிப்பை அவர் விவரித்தார்.




















