அலோர் காஜாவில் ரசாயனக் கசிவு: தீயணைப்புப் படையினர் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர்!

அலோர் காஜா:

மலாக்காவில் உள்ள சுற்றுலா விடுதி (Resort) ஒன்றின் பம்ப் அறையில் (Pump room) ஏற்பட்ட ரசாயனக் கசிவை, மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

இன்று பிற்பகல் 3:29 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து அவசர அழைப்பு வந்ததை அடுத்து, அலோர் காஜா தீயணைப்பு நிலையத்திலிருந்து மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்பு மண்டலம் 2-இன் தலைவர் சுல்கைரானி ரம்லி தெரிவித்தார்.

“சம்பவ இடத்திற்குச் சென்ற ‘ஹாஸ்மட்’ (Hazmat) மற்றும் ‘சி.பி.ஆர்.என்.இ’ (CBRNe) ஆபத்தான ரசாயனக் கையாளுதல் குழுவினர், நீச்சல் குளத்தைச் சுத்திகரிப்பதற்காக வடிகட்டுதல் அமைப்பில் (Filtration system) ரசாயனத்தை ஊற்றும்போது இந்த விபத்து நேரிட்டதைக் கண்டறிந்தனர்.

அறையின் தரையிலும், ஒரு வாளியிலும் ரசாயன திரவமும் பொடியும் சிதறிக் கிடந்தன. அப்போது அங்கு நடத்தப்பட்ட காஸ் சோதனையில், குளோரின் வாயுவின் அளவு 3 ‘பிபிஎம்’ (ppm) ஆகப் பதிவாகியிருந்தது,” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்தில் சிக்கிய ரசாயனம், நீச்சல் குளங்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் 90 சதவீத ‘டிரைக்ளோரோஐசோசயனுரிக் அமிலம்’ (Trichloroisocyanuric Acid – TCCA) என்ற தூள் வகை ரசாயனம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சிதறிய இந்த ரசாயனம், அங்கிருந்த அதிகப்படியான தண்ணீருடன் வினைபுரிந்ததால், அந்த அறையில் சில சிறிய ரக வெடிப்புகள் ஏற்பட்டதாக ஹாஸ்மட் நிபுணர்கள் தெரிவித்தனர்.

“இதனைத் தொடர்ந்து, தீயணைப்புப் படையினர் அந்த ரசாயனத்தை மிகவும் பாதுகாப்பான வேறொரு கொள்கலனுக்கு மாற்றினர். பின்னர், உறிஞ்சும் அட்டைகளைப் (Absorbent pads) பயன்படுத்தி எஞ்சியிருந்த ரசாயனங்களை அகற்றியதுடன், மேலும் நச்சு வாயு பரவாமல் தடுக்க தண்ணீரை ஊற்றி அதனை வீரியமிழக்கச் செய்தனர்.

இதன் பின்னர் நடத்தப்பட்ட இறுதிப் பரிசோதனையில், குளோரின் வாயுவின் அளவு 0 ‘பிபிஎம்’ ஆகக் குறைந்து, அந்த இடம் முற்றிலும் பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்டது,” என்று சுல்கைரானி கூறினார்.

இந்த அதிரடி மீட்புப் பணியில் 8 தீயணைப்பு வீரர்கள், அவசர மருத்துவ மீட்பு சேவை (EMRS) வாகனம் மற்றும் ரசாயன நீக்க (DECON) வாகனம் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களும் ரசாயன நீக்க நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது பெரிய அளவிலான சேதங்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here