கோலாலம்பூர்: ரவாங்-பத்து ஆரங் சாலையில் பலருக்கு இடையே நடந்த மோதல் குறித்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. மோதல் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு காணொளிப் பதிவு வெளியிடப்பட்டதை அடுத்து, மேலதிக நடவடிக்கைக்காக கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையகம் இன்று ஒரு புகாரைப் பதிவு செய்துள்ளதாக கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர் நூர் அரிஃபின் நசீர் தெரிவித்தார்.
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் இணைப்புச் சாலை நுழைவதற்கு முன்பு, ரவாங் சுங்கச்சாவடியை நோக்கிச் செல்லும் ஜாலான் ரவாங்-பத்து ஆராங் சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு, பொது இடத்தில் கலவரம் செய்ததாக விசாரிக்கப்படுகிறது. இக்குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படலாம்.
இந்தச் சம்பவம் குறித்த தகவல் தெரிந்த பொதுமக்கள் முன்வர வேண்டும் அல்லது விசாரணை அதிகாரி, ஆய்வாளர் பிரகாஷ் சிதரம்பரத்தை 012-2940827 என்ற எண்ணிலோ அல்லது கோம்பாக் செயல்பாட்டு அறையை 03-61262222 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.









