தேசிய தலைமைத்துவத்தின் முடிவின்படியே பினாங்கு பக்கத்தான் – பாரிசான் உறவு அமையும்! முதலமைச்சர் சாவ் கோன் இயோ தகவல்

ஜார்ஜ் டவுன்:

ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் அண்மைக்காலமாக அரசியல் ரீதியான சலசலப்புகள் நிலவி வந்தபோதிலும், பினாங்கு மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பான் (PH) மற்றும் பாரிசான் நேஷனல் (BN) ஆகிய கூட்டணிகளுக்கு இடையிலான உறவு இன்னும் சுமுகமாகவே உள்ளதாக மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயோ தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலில் இரு கூட்டணிகளும் இணைந்து போட்டியிடுவது குறித்த இறுதி முடிவை தேசிய அளவிலான தலைமைத்துவமே எடுக்கும் என்று, பினாங்கு மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான அவர், தெளிவுபடுத்தியுள்ளார்.

இன்று கொம்தாரில் (Komtar) உள்ள தனது அலுவலகத்தில், மாநில அரசின் தேர்தல் அறிக்கை (Manifesto) முன்னேற்றங்கள் குறித்து நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், வரவிருக்கும் பொதுத்தேர்தல் கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோதே சாவ் கோன் இயோ இதனைத் தெரிவித்தார்.

ஒற்றுமை அரசாங்கத்திற்குள் (Unity Government) பிளவுகள் அல்லது விரிசல்கள் தொடர்ந்து நீடித்தால், முன்கூட்டியே பொதுத்தேர்தல் (Snap General Election) நடத்தப்படலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் எச்சரித்திருந்தார். மேலும், பாரிசான் நேஷனல் கூட்டணி தனித்துப் போட்டியிட முடிவு செய்தால், நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பினாங்கு மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து இடங்களிலும் தனித்துக் களம் இறங்க பக்கத்தான் ஹராப்பான் தயாராக உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

“பிரதமரின் அண்மைக்காலக் கருத்துகள் முக்கியமாக ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களின் நடப்பு அரசியல் சூழலை மையமாகக் கொண்டே அமைந்திருந்தன. தற்போது சில மாநிலங்கள் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தாலும், சில மாநிலங்கள் பாரிசான் கூட்டணியுடன் இணைந்து செயல்படத் தயாராகவே உள்ளன,” என்று சாவ் கோன் இயோ கூறினார்.

இறுதி முடிவு தேசியத் தலைமையிடமே: “எப்படி இருந்தாலும், இறுதி முடிவை தேசிய அளவிலான தலைமைத்துவமே எடுக்கும். அனைத்து மாநிலங்களும் அந்தத் தேசிய முடிவிற்கு இணங்கவே தங்களை வழிநடத்திக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here