கோலாலம்பூர்:
“என் மகன் ஒரே ஒருமுறை மட்டும் அல்ல, கடந்த ஓராண்டுக்குள் மூன்று முறை சக மாணவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளான். இதனால் அவனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பள்ளிக்குச் செல்லவே பயந்து கடும் மன உளைச்சலுக்கு (Trauma) ஆளாகியுள்ளான்,” எனப் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவனின் தாய் ஃபாத்தின் (வயது 35) கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
குபாங் பாசு (Kubang Pasu) மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் பயின்று வரும் தனது 9 வயது மகனுக்கு நேர்ந்த இந்தத் துயரங்கள் குறித்து அவர் ஜித்ராவில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பின்வரும் தகவல்களை பகிர்ந்தார்.
ஓராண்டுக்குள் நிகழ்ந்த 3 கொடூரச் சம்பவங்கள் நடந்ததாகவும், முதல் சம்பவம் மே 17, 2025 அன்று, தனது மகன் பள்ளியில் வைத்து சக மாணவனால் பலவந்தமாகத் தள்ளிவிடப்பட்டுள்ளான். முதலில் அது சாதாரணக் காயம் என்று பெற்றோர் நினைத்த நிலையில், தனியார் மருத்துவமனையில் பரிசோதித்தபோது சிறுவனின் வலது கையில் எலும்பு முறிவு (Fracture) ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதற்கான மருத்துவச் சிகிச்சைக்காக அவளது கணவர் சுமார் 5,000 ரிங்கிட் வரை செலவு செய்துள்ளார்.
இரண்டாம் சம்பவம் மார்ச் 26, 2026, ஹரிராயா பெருநாளுக்கு முன்பு, மற்றொரு மாணவன் இச்சிறுவனின் கன்னம் மற்றும் கண் பகுதியில் பலமுறை அறைந்துள்ளான். இதனால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் வீக்கங்கள் காரணமாக, அந்தச் சிறுவன் பெருநாள் கொண்டாட்டங்களின் போது உறவினர்கள் மற்றும் விருந்தினர்களைச் சந்திக்கக் கூட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் பெரும் மனவேதனைக்கு ஆளாகியுள்ளான்.
மூன்றாவது சம்பவம் (மே 17, 2026), கடந்த வாரம், வேறொரு மாணவன் இச்சிறுவனின் கண்ணுக்குக் கீழே கூர்மையான பென்சிலால் கொடூரமாகக் குத்தியுள்ளான் (Stabbed with a pencil).
பென்சில் குத்துச் சம்பவத்திற்குப் பிறகு, கடந்த மே 18 அன்று பள்ளி நிர்வாகம் பெற்றோரைக் கூப்பிட்டு ஒரு சமரசக் கூட்டத்தை (Mediation session) நடத்தியுள்ளது. “அந்தக் கூட்டத்தில், என் மகன் திருப்பித் தாக்காமல் அமைதியாக இருந்தும் கூட, அவனையும் சேர்த்து பள்ளி நிர்வாகம் குற்றம் சாட்டியது எங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளியில் என் மகனின் பாதுகாப்பிற்குப் பள்ளி நிர்வாகம் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை,” என ஃபாத்தின் கவலையுடன் குறிப்பிட்டார்.
பள்ளியின் தொடர் மெத்தனப் போக்கினாலும், பாதுகாப்பு இல்லாத சூழலினாலும் விரக்தியடைந்த பெற்றோர், இனிமேலும் பொறுக்க முடியாது என முடிவெடுத்து குபாங் பாசு மாவட்டக் காவல்துறைத் தலைமையகத்தில் அதிகாரப்பூர்வப் புகார் ஒன்றை அளித்துள்ளனர். மேலும், தங்களின் மகனை உடனடியாக வேறொரு பள்ளிக்கு மாற்றவும் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது குறித்து குபாங் பாசு மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்பிரண்டெண்ட் முகமட் ராட்ஸி அப்துல் ரஹீம் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இச்சம்பவம் குறித்த போலீஸ் அறிக்கை பெறப்பட்டதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















